மதுரை மத்திய தொகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் - அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு.

Published Date: December 14, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய தொகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் உயர்தர சிகிச்சை பெற்றிட வேண்டும் என்ற நோக்குடன் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகம் பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மதுரை கல்லூரி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

இதில் உயர் இரத்த அழுத்த நோய், சிகிச்சை நீரழிவு நோய் கண்டறிதல், மார்பகப் புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை,  ஈசிஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிறுநீரக பரிசோதனை உள்ளிட்ட 24 வகையான பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

இம்முகாமினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பொதுமக்களுக்கான மருத்துவ சேவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார், உதவி நகர் நல அலுவலர்கள் அபிஷேக், ஸ்ரீ கோதை உள்ளிட்ட மருத்துவர்கள், அதிகாரிகள்,  திமுக நிர்வாகிகள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்

 

Media: Dinakaran